InformationNeeds.com
Home/கட்டுரைகள்/பவளமலை அருள்மிகு முத்துகுமாரசுவாமி கோவில் | Pavalmalai Arulmiku Muthukumaraswamy Temple
Spirituality

பவளமலை அருள்மிகு முத்துகுமாரசுவாமி கோவில் | Pavalmalai Arulmiku Muthukumaraswamy Temple

June 22, 2024uma227 views

சத்ரு சம்ஹார அர்ச்சனை செய்யப்படும் பவளமலை அருள்மிகு முத்துகுமாரசுவாமி கோவில்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டியப்பாளையத்தில் பவளமலை என்ற அழகிய மலையில் இந்த முருகன் கோவில் உள்ளது.  'பச்சை மலை, பவளமலை எங்கள் மலை அம்மே' என்று குற்றாலக்குறவஞ்சியில் ஒரு வரி உண்டு. எனவே பச்சமலைக்கு இணையாக பவளமலையும் கோபிசெட்டிபாளையத்தின் முக்கிய அடையாளமாக உள்ளது.

 பழமையான இக்கோயிலில் விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். முல்லைக்குத் தேர் வழங்கிய பாரி ஆட்சி செய்த  பெருமை இந்தப் பவளமலைக்கு உண்டு. பச்சைமலையில் உள்ள முருகப்பெருமானை வழிபட்ட துர்சவ முனிவரால் இந்த கோயிலும் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் வள்ளி-தெய்வானை சன்னதி, கைலாசநாதர் (சிவன்), இடும்பன், விநாயகர், நவக்கிரகங்கள் என தனித்தனி சன்னதிகள் உள்ளன. 

தல வரலாறு : 

வாயு பகவான் மற்றும் ஆதிசேஷனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற  சண்டை வந்த, வாயு பகவான் மேரு மலையைத் தாக்கும் நோக்கத்துடன் மோதியது. மலைச் சிகரம் ஒன்று காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல் பூமியில் விழுந்தது. அதுதான் பவளமலை என்று வரலாறு கூறுகிறது. ஞானப்பழம் கிடைக்காததால் கோபமடைந்த முருகன் பழனிக்குச் சென்று தங்கினார்.அதன் பிறகு உலக மக்கள் குன்று தோறும் குமரன் என்று வணங்கத் தொடங்கினர். இவ்வாறே பவளமலையில் குமரன் இருப்பதாக நம்பிய கணவாள குலத்தைச் சேர்ந்த பக்தர்கள் இங்கு முருகப்பெருமானுக்குக் கோயில் கட்டி வழிபட்டனர். 

இங்கு சிவபெருமான் கைலாசநாதராக அருள்பாலிக்கிறார். கைலாசநாதர் லிங்கம் அருகில் உள்ள வயல்வெளியில் புதைக்கப்பட்டிருந்து. விவசாயிகள் வயலை உழுது கொண்டிருந்தபோது லிங்கம் கிடைத்தது. விவசாயிகள் அதைக் கொண்டு வந்து கோயிலில் வழிபட்டு சுயம்புலிங்கமாக  கருதுகின்றனர். கைலாசநாதரை வழிபட்டால் நோய்கள் தீரும். 

தவக்கோலத்தில் வள்ளி தெய்வானை :  

மூலவர் முத்துக்குமாரசுவாமி பிரம்மச்சாரியாக எழுந்தருளியுள்ளார். வாயுமூலையில் வள்ளி தெய்வானை முருகனை மணமுடிக்க தவம் செய்கிறார்கள். அதாவது, திருமணத்திற்கு முந்தைய வள்ளி, தெய்வானையை இங்கு தரிசிக்கலாம். கைலாசநாதர், பெரியநாயகி அம்பாள் சந்நிதிகளும் உள்ளன. 

திரிசதார்ச்சனை : 

திரி என்றால் மூன்று, சதம் என்றால் நூறு. திரிசதை என்றால் 300. முருகப்பெருமான் சூரனை வதம் செய்த பிறகு இந்திரன் மற்றும் பல தேவர்களால் செய்யப்பட்ட அர்ச்சனை தான் திரிசதார்ச்சனை. வெற்றியைப் புகழ்ந்து செய்யப்பட்டதால் இது சத்ரு சம்ஹார திரிசதார்ச்சனை என்று அழைக்கப்பட்டது. சிவனைப் போலவே முருகனும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள் செய்தல் ஆகிய ஐந்து தொழில்களை செய்கிறார் என்பதைக் குறிக்கும் வகையில் சிவபெருமானுக்கு இணையாக இத்தல முருகனைக் கொண்டு திரிசதார்ச்சனை  செய்யப்படுவது சிறப்புமிக்க தாகும். 

அவருடைய ஒரு முகத்துக்கு 50 அர்ச்சனைகள் வீதம், ஆறு முகங்களுக்கு 300 அர்ச்சனைகளும் செய்வதே திரிசதார்ச்சனை. 

பரிகாரங்கள் : 

 பவளத்தின் நிறம் சிவப்பு, சிவப்பு நிறத்தின் அதிபதி செவ்வாய். செவ்வாய் கிரகத்தின் அதிதேவதை சுப்பிரமணியர். பவளமலையில் திரிசதார்ச்சனை செய்வதால் செவ்வாய் தோஷம் நீங்கும். 

 திருமண தடைகள் நீங்கவும், குழந்தை பிறக்கவும், தொழில் விருத்தி அடையவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் பால்குடம் எடுத்தும், பால் அபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 

திருவிழாக்கள் : 

 திருக்கார்த்திகை, கந்த சஷ்டி, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், தைப்பூசம் போன்றவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பவளமலை முருகனைத் தரிசிக்க  படியேறி சென்றால் , அதுவரை பக்தர்களின் மனதில் குடிகொண்டிருந்த துன்பங்களும், துயரங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. 

அமைவிடம்: 

ஈரோட்டில் இருந்து கோபிசெட்டிபாளையம் 35 கி.மீ. தூரத்தில் உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ தூரத்தில் முருகன்புதூர் பஸ் ஸ்டாப்  அருகில் கோவில் உள்ளது. 

பவளமலை அருள்மிகு முத்துகுமாரசுவாமி கோவில் | Pavalmalai Arulmiku Muthukumaraswamy Temple | InformationNeeds